கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு
கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51% நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பெற்றோர் மற்றும் பாதுகாவலரை இழந்து வாடும் குழந்தைகளுக்காக மே 29, 2021 அன்று தொடங்கப்பட்டது PM CARES திட்டமாகும். மார்ச் 11, 2020 முதல் மே 5, 2023 வரை குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UTs) உள்ள 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை
ஆனால், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 558 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன. அதே சமயம் 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், 18 விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளன என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்படவில்லை. ராஜஸ்தான்(1,553), மகாராஷ்டிரா(1,511) மற்றும் உத்தரபிரதேசத்தில்(1,007) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 855 விண்ணப்பங்களும், ராஜஸ்தானில் இருந்து 210 விண்ணப்பங்களும், உத்தரபிரதேசத்தில் இருந்து 467 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கு நிதியுதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.