Loading...
ஆப்ரேஷன் ட்ரைடண்ட்: வடகிழக்கில் போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு, 18 பேர் கைது
ஆப்ரேஷன் ட்ரைடண்ட் நடவடிக்கை மூலம் சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்ததாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் ட்ரைடண்ட்: வடகிழக்கில் போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு, 18 பேர் கைது

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
04:01 pm

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை ஆப்ரேஷன் ட்ரைடண்ட் (Operation Trident) என்ற அதிரடி நடவடிக்கை மூலம் பாதுகாப்பு முகமைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 38 இடங்களில் பாதுகாப்புப் படையினர் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹவாலா

ரூ.100 கோடி ஹவாலா மற்றும் முடக்கப்பட்ட கணக்குகள்

இந்த அதிரடி வேட்டையில் சர்வதேச போதைப்பொருள் கும்பலின் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஹவாலா பணப்பரிவர்த்தனைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மேலும், குற்றவாளிகளுடன் தொடர்புடைய 1,424 வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டதுடன், ரூ.17.82 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சோதனையின் போது சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 டெட்டனேட்டர்கள் வெடிபொருட்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் புலனாய்வு அமைப்புகள் கைப்பற்றியுள்ளன.

சர்வதேச கடத்தல்

போதைப்பொருள் ஒழிப்பு இலக்கு

இந்த போதைப்பொருள் கும்பல் இந்தியா, மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள 'மரண முக்கோண பாதை' (Death Triangle Corridor) வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, 2029 டிசம்பர் 31-க்குள் நாட்டின் அனைத்து போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளையும் வேரோடு அகற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்றும், கடத்தல் கும்பல்கள் முழுமையாக ஒடுக்கப்படும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய முகமைகள் மற்றும் மூன்று மாநில காவல் துறையினர் இணைந்து நடத்திய இந்தச் சிறப்பான நடவடிக்கைக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT