70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!
IIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருக்கிறது என்ற தகவல் மக்களவைக் கூட்டத்தில் தெரிய வந்திருக்கிறது. இந்த 70% பணியிடங்களும் கடந்த ஒரு வருடமாக நிரப்படாமல் உள்ளது. நாடு முழுவதும் இருக்கும் 23 IIT மற்றும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பதவிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக, பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பணியிடங்களில் வெறும் 30% மட்டுமே நிரப்பபட்டுள்ளது. செப்டம்பர் 2021-2022க்குள் 1,439 இடஒதுக்கீட்டு பணியிடங்கள் நிரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 449 பணியிடங்கள் மட்டுமே இந்தியா முழுவதும் நிரப்பப்பட்டிருக்கிறது.
சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிழக எம்.பிகள்!
அதிகபட்சமாக, பனாரஸ் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் 144 மற்றும் 75 இடங்கள் காலியாக உள்ளன. 12 மத்திய பல்கலைகழகங்களில் கடந்த ஒரு வருடத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 1 இடம் கூட நிரப்படவில்லை. 6 IITகளில் 1 பழங்குடியினருக்கான இடத்தை கூட நிரப்பவில்லை. மும்பை, அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் இந்த தகவல்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. இதைப் பற்றி மக்களவையில் பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, பணியிடங்களை நிரப்புவது என்பது ஒரு தொடர் செயல்பாடு என்று பதிலளித்துள்ளார்.