தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று தெலுங்கு வருட பிறப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று(மார்ச்.,23) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் பின்னணி பாடகியான வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்கனவே இந்த தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இதற்க்கு மாநில அரசுக்கு உரிமையில்லை என்று கூறி திருப்பியனுப்பிவிட்டார்.
இதுவரை 41 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை
இந்நிலையில் இந்த மசோதா தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. இதுவரை 41 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனை தடை செய்ய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்னஞ்சலில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மனசாட்சியை உறங்க செய்துவிட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிரும் பறிக்கப்படாமல், ஒரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.