குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக சில போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு மோசடி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்கி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் செயல்படும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்ப முடியாத அளவிற்கு குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக சில விளம்பரங்களை யூடியூப்'ல் பார்க்கும் பாதிக்கப்பட்டோர் அதில் கொடுக்கப்படும் எண்ணினை தொடர்பு கொள்கிறார்கள்.
ஆர்டர் செய்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிரும்படி அறிவுறுத்தல்
அப்போது கஸ்டமர் கேர் என்று கூறி அந்த பக்கமிருந்து பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, தங்கள் ஆர்டரை செய்து முடித்தவுடன் அந்த பக்கத்தினை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வாட்ஸ்அப் மூலம் அந்த புகைப்படத்தை அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி வீடியோவில் குறிப்பிட்டிருந்த http://luckycrackers.com/ என்னும் இணையதளத்தில் ஆர்டர் செய்து அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பாதிக்கப்பட்டோர் தாங்கள் முன்னதாக தொடர்புக்கொண்டு பேசிய கஸ்டமர் கேர் எண்ணிற்கு அனுப்புகிறார்கள்.
கடந்த 1 மாதத்தில் 25 வழக்குகள் பதிவு
அதன் பின்னர் ஆர்டர் செய்த பொருட்களுக்கான பணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட சில நொடிகளில் அந்த இணையதளமும், தொடர்புகொண்ட எண்ணும் அணுக முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதன் மூலம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் இழக்கப்படுகிறது, பட்டாசும் வழங்கப்படுவதில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்று 25 வழக்குகள் பதிய பட்டுள்ளதாக சைபர் க்ரைம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில் செயல்பட பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்கள்
இதுபோன்று ஏமாறாமல் இருக்க சைபர் க்ரைம் சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட இணையதளத்தின் சட்டபூர்வ தன்மையினை முதலில் சரிபார்க்க வேண்டும். பின்னர் வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரி, லேண்ட்லைன் எண் உள்ளிட்டவை இணையத்தளத்தில் உள்ளதா? என்பதை சரிபார்த்த பின்னர் ஆன்லைன் கட்டணங்களை பாதுகாப்பான முறையில் செலுத்துவதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இணையதளம் அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்
பிரபலமில்லா இணையதளம் என்றால் கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தினை தேர்வு செய்வது நல்லது. மேலும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள், மின்னஞ்சல் விவரங்கள், ஸ்க்ரீன்ஷாட்கள் போன்ற பதிவுகளை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் மோசடி நடக்கும் பட்சத்தில் புகாரளிக்க இந்த பதிவுகள் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் www.cybercrime.gov.in என்னும் இணையதளம் மூலமாகவோ, கட்டணமில்லா சைபர் க்ரைம் எண் 1930'க்கு டயல் செய்தும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.