தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை
கன்னியாகுமரி மாவட்டம், தோஅருகேவுள்ள மாதவலயம் பகுதியை சேர்ந்து சையத் அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளோருக்கு சிரமமாக உள்ளது, எனவே அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று(பிப்.,10) விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த கடை உரிமையாளர் கோழி கடை நடத்தவே உரிமம் வைத்துள்ளார், ஆனால் மாடு மற்றும் ஆட்டிறைச்சிகளையும் விற்பனை செய்கிறார் என்று வாதாடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்கள்.
உரிமம் பெறாமல் நடத்தும் இறைச்சி கடைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு
அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதியின்றி இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது, கோயில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமபுறப்பகுதிகளில் அனுமதியின்றி இறைச்சி கடை நடத்தவோ, கால்நடைகளை வெட்டவோ அனுமதியில்லை என நீதிபதிகள் கூறினர். மேலும் கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சி கூடங்களை தவிர்த்து வேறிடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என சட்டவிதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் உரிமம்பெறாமல் மாட்டிறைச்சி விற்பனை செய்ததால் அவர் அந்த கடையினை மேற்கொண்டு நடத்த கூடாது என்று உத்தரவிட்டது. அதோடு, உரிமம்பெறாமல் நடத்தும் இறைச்சிக்கடைகளை ஆய்வுசெய்து, நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.