முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர்.க்கு பின்னர் அதிமுக'வை வழிநடத்திய ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கொண்டாட வேண்டுமென அதிமுக'வினர் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில், அவரது பிறந்தநாளையொட்டி மார்ச் 5,6,7,10,11,12 தேதிகளில் 6 நாட்கள் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளை மாவட்ட செயலாளர்கள் நல்ல முறையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுக்கூட்ட பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்
மேலும் அன்று கண்தானம், ரத்ததானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்-மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி உபகரணங்கள் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்துதல், இலவச வேட்டி, சேலை விநியோகம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த 6 நாட்கள் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அன்றைய தினம், அதிமுக அலுவலகத்தில் இந்த பிறந்தநாள் விழா நடத்தப்பட்டு அவரது சிலைக்கு மாலை மரியாதை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, "நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழ்" சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புரட்சி தலைவி அம்மா அவர்களின் 75ம் பிறந்தநாள் விழா சிறப்பு மலரும் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.