பெங்களூரு குண்டுவெடிப்பு வீடியோ: பலமுறை உடைகளை மாற்றி காவல்துறையில் சிக்காமல் தப்பித்த சந்தேக நபர்
பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் சந்தேக நபர் குண்டு வெடிப்புக்குப் பிறகு தனது உடைகளையும் தோற்றத்தையும் பலமுறை மாற்றிக்கொண்டதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசாருக்கு கிடைத்த மூன்று சிசிடிவி வீடியோக்களில், சந்தேக நபர் மூன்று வெவ்வேறு ஆடைகளில் காணப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தின் முதல் வீடியோ, சந்தேக நபர் ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை(IED) வைப்பதற்காக மார்ச் 1ஆம் தேதி காலை 11.45 மணியளவில் ஓட்டலுக்குச் செல்வதைக் காட்டியது. அந்த வீடியோவில், அவர் முழு கை சட்டை மற்றும் வெளிர் நிற போலோ தொப்பி, கண் கண்ணாடிகள் மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பதை காண முடிகிறது.
குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்டது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள்
மதியம் 2.30 மணியளவில் ஊதா நிற அரைக்கை சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிந்து அவர் வேறொரு பேருந்தில் பயணம் செய்தது மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் அப்போது முகக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் கண்ணாடி அணியவில்லை. இரவு 9 மணியளவில் பதிவாகியுள்ள மூன்றாவது சிசிடிவி காட்சி, அந்த சந்தேக நபர் பெல்லாரி மத்திய பேருந்து நிலையத்தில் இருப்பதை காட்டுகிறது. ஆனால், அதில் அவர் தொப்பியோ கண்ணாடியோ அணியவில்லை. குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் பதிவான சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், அந்த குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்டது என்பதை உறுதி செய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.