
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த நொய்டா இளைஞரின் கடத்தல் நாடகம்; சிக்கியது எப்படி?
செய்தி முன்னோட்டம்
நொய்டாவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.4.7 லட்சத்தை இழந்த பிறகு, தனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.20 லட்சத்தைப் பறிப்பதற்காகத் தன்னைத் தானே கடத்திக்கொண்டதாக நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷாராம் குமார் என்று அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் உள்ள பட்டி என்ற தொழில்துறைப் பகுதியில் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். காவல்துறையின் கூற்றுப்படி, ஆஷாராம் குமார், ஆன்லைன் கலர் பிரடிக்ஷன் விளையாட்டிற்குப் பணம் தேவைப்பட்டதால், தனது சூதாட்டப் பழக்கத்திற்காக அறிமுகமானவர்களிடம் இருந்து பொய்களைக் கூறிப் பணம் கடன் வாங்கியுள்ளார்.
நாடகம்
கடத்தல் நாடகம்
அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெற்றோரிடம் இருந்து பணம் பறிப்பதற்காகக் கடத்தப்பட்டதாக நாடகம் ஆடத் திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 17 அன்று, நொய்டாவில் உள்ள தனது அண்ணன் மனைவியின் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆஷாராம் குமார், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர், அவரது சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. அத்துடன், வாயைக் கட்டி, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமாரின் புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். மிரட்டல் புகைப்படங்களின் பின்னணியில் இருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைவினை ஓடு ஒன்றைக் கண்டுபிடித்த புலன்விசாரணைக் குழுவினர், ஆஷாராம் குமார் முன்பு பணிபுரிந்த பட்டி பகுதிக்கு விரைந்தனர்.
கண்டுபிடிப்பு
ஆஷாராம் குமார் கண்டுபிடிப்பு
அங்கு 50 க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோதனை செய்ததில், அந்தக் குறிப்பிட்ட ஓடு வடிவமைப்பை ஒப்பிட்டு, ஒரு வீட்டிற்குள் ஆஷாராம் குமார் மறைந்திருந்ததைக் கண்டறிந்தனர். ஆஷாராம் குமார் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பலியாக வேண்டாம் என்று பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இத்தகைய விளையாட்டுகளில் உள்ள உளவியல் மற்றும் நிதி அபாயங்களையும் எடுத்துரைத்துள்ளது.