தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை மேட்டுப்பாளையத்தில் ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தினை கொடுத்துவிட்டது. வீடுகளில் உபயோகிக்கும் மின்சார கட்டணத்தில் எவ்வித உயர்வும் ஏற்படுத்தவில்லை. அதே போல் விசைத்தறி, கைத்தறி, விவசாயம் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களின் மின்சார கட்டணத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கூட மத்திய அரசின் அறிவுறுத்தல்படி செய்யப்பட்டதாகும். தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது வீட்டிலோ அல்லது அவரது தோட்டத்திலோ மின்வெட்டு ஏற்பட்டதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அமித்ஷா வருகைப்போது ஏற்பட்ட மின்வெட்டு எதிர்பாராமல் நடந்த ஒன்று
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் மின்வெட்டு என்பது எங்கும் இல்லை. மிக சீராக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தாம் இருப்பதை காட்டிக்கொள்ள ஓபிஎஸ் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்வெட்டு எதிர்பாரா விதமாக நடந்த ஓர் விஷயமாகும். அதுவும் உடனே சரிசெய்யப்பட்டு விட்டது. அதனால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்னும் எண்ணத்தினை கைவிட வேண்டும். எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்னும் எண்ணம் இந்த திராவிட மண்ணில் என்றும் எடுபடாது" என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.