'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை': வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா அனுமதிப்பது ஒரு மிக பெரிய பிரச்சனை என்று கூறியுள்ளார். "நாம் ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பேச்சு சுதந்திரம் என்பதை வன்முறையைத் தூண்டும் வரை நீட்டிக்க முடியாது. அது சுதந்திரத்தைப் பாதுகாப்பது அல்ல, சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் " என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
'அது உங்கள் மக்களாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்': ஜெய்சங்கர் கேள்வி
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இந்திய தூதர்களுக்கு கனடாவில் விடுக்கப்படும் அச்சுறுத்துதல்கள் ஆகியவை குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த கருத்துக்களை கூறியுள்ளார். "நீங்கள் என் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்? அது உங்கள் தூதரகங்களாகவோ, உங்கள் இராஜதந்திரிகளாகவோ, உங்கள் மக்களாகவோ இருந்திருந்தால் உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?" ஜெய்சங்கர் மேலும் கனடாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதியும் கனட குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது.