என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
செய்தி முன்னோட்டம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25) விரிவான அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வழக்கமாக ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வந்த முதல்வர் விஜய், தற்போது அதை மாற்றி இந்திய அரசு எனக் குறிப்பிட்டிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.
பங்கு விற்பனை
என்எல்சி நிறுவனத்தின் 3% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியாவின் பெய்டு-அப் ஈக்விட்டியில் இருந்து சுமார் 3 சதவீத பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் என்ற சந்தை வழிமுறை மூலம் பொதுமக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்று மூலதன விலக்கல் செய்ய மத்திய அரசு அண்மையில் திட்டமிட்டிருந்தது. இதில் 2 சதவீத அடிப்படைப் பங்குகளும், கூடுதலாக 1 சதவீத கிரீன்-ஷூ ஆப்ஷனும் உள்ளடங்கி இருந்தது. மத்திய அரசின் இந்த அடுத்தகட்டப் பங்கு விலக்கல் அறிவிப்புதான் தற்பொழுது தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்
என்எல்சி என்பது வெறும் வணிக நிறுவனம் அல்ல
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் என்எல்சி நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான வரலாற்றுப் பிணைப்பை முதல்வர் விஜய் ஆழமாக சுட்டிக்காட்டியுள்ளார். என்எல்சி என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வெறும் சாதாரண வணிக நிறுவனம் அல்ல என்றும், அது தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியோடு பல தசாப்தங்களாக இரண்டறக் கலந்துள்ள ஒரு மிக முக்கிய தேசிய உத்திசார் சொத்து என்றும் அவர் வர்ணித்துள்ளார். தமிழ்நாட்டின் நெய்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் தமிழக மண்ணிலேயே அமைந்துள்ளன என்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழக மக்கள்
தமிழக மக்களின் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது என வலியுறுத்தல்
கடந்த பல தசாப்தங்களாக இந்த மாபெரும் பொதுத்துறை நிறுவனம் உருவாவதற்கும் அதன் தொடர் விரிவாக்கப் பணிகளுக்கும் தமிழக அரசு நிர்வாக ஆதரவையும் உள்கட்டமைப்புகளையும் வழங்கியுள்ளது என்பதை முதல்வர் தனது கடிதத்தில் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக, உள்ளூர் மக்கள் தங்களது வாழ்வாதார நிலங்களை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மனமுவந்து தியாகம் செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், எனவே என்எல்சி நிறுவனத்தின் எதிர்கால முடிவுகளில் தமிழ்நாட்டிற்கு முழுமையான மற்றும் நியாயமான உரிமை உள்ளது என்றார். மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கும் இத்தகைய பங்கு விலக்கல் முடிவுகள், பொதுத்துறை நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || இனி இந்திய அரசு.. முதலமைச்சரின் திடீர் மாற்றம் | #CMVijay | #IndianGovt | #Governor | #PMModi | #PolimerNews pic.twitter.com/gHsazzfRsa
— Polimer News (@polimernews) June 25, 2026