வேலைவாய்ப்பு அதிகரிக்கும்! பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
தனியாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களை பயணிகள் பயன்பாட்டிற்கான பைக் டாக்ஸிகளாக இயக்க மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். சில மாநிலங்களில் இந்தச் சேவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள போதிலும், பல மாநிலங்கள் இன்னும் இதற்கான அனுமதியை வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து என்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அந்தந்த மாநிலங்களே இது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
புதிய வேலைவாய்ப்பு
8 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு சாத்தியம்
பைக் டாக்ஸி சேவைகளை நாடு முழுவதும் ஊக்குவிப்பதன் மூலம் சுமார் 8 கோடி (80 மில்லியன்) மக்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இது கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
எனினும், இதற்கான காப்பீடு, அனுமதி சீட்டு மற்றும் இதர நிபந்தனைகள் மாநில அரசுகளின் விதிகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
நெகட்டிவ் பாயிண்ட்
மோட்டார் வாகன சட்டத்தில் புதிய நெகட்டிவ் பாயிண்ட் முறை
சாலைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, போக்குவரத்து விதிகளைத் தொடர்ந்து மீறும் ஓட்டுநர்களுக்கு நெகட்டிவ் பாயிண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு விதிமீறலுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் குறைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நீக்கப்படவோ அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது.
ஓட்டுநர் ஆரோக்கியம்
ஓட்டுநர்கள் ஆரோக்கியத்திற்காக சுரக்ஷா முன்னோடித் திட்டம்
சாலைப் பாதுகாப்பில் ஓட்டுநர்களின் உடல்நலன், குறிப்பாகப் பார்வைத் திறன் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சுரக்ஷா என்ற புதிய முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
முதற்கட்டமாக மகாராஷ்டிராவின் நாக்பூர் - காம்ப்டி தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் சந்திராபூர் சுரங்கப் பகுதிகளில் உள்ள 10,000 ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் கனரக வாகன ஓட்டுநர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.