ராமர் பூஜைக்கு தமிழகம் தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுளளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு இப்படி ராமர் பூஜைக்கு தடை விதிப்பது "இந்து விரோத" செயல் என்றும் அவர் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "தனியாரால் நடத்தப்படும் கோவில்களிலும் நிகழ்ச்சிகள் நடத்துவதை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு
அதை மீறி ராமருக்கு பூஜை நடத்துபவர்களின் 'பந்தல்களை' கிழித்து விடுவோம் என்று போலீஸார் மிரட்டுவதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், நிர்மலா சீதாராமனின் கூற்றுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ தமிழ்நாட்டில் எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். "ராமர் பெயரில் பூஜைகள் செய்வதற்கோ அன்னதானம் வழங்குவதற்கோ தமிழ்நாட்டின் கோவில்களில் HR&CE எந்த தடையும் விதிக்கவில்லை. நிர்மலா சீதாராமன் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் உண்மைக்கு எதிரான வதந்திகளை பரப்புவது துரதிர்ஷ்டவசமானது." என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.