நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் 3-வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இன்று மக்களவை தொடங்கிய பின்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது, "2013-ம் ஆண்டு இந்தியாவை பலவீனாமான பொருளாதாரங்களின் பட்டியலில் வைத்திருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த மோர்கன் ஸ்டான்லி நிறுவனம். ஆனால், தற்போது அதே நிறுவனம் இந்திய பொருளாதாரத்திற்கு அதிக மதிப்பீட்டை வழங்கியிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றையும் கடந்து, கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களின் மூலம், இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தியா" எனக் கூறினார்.
இந்தியா
மக்களவையில் நிர்மலா சீதாராமன் உரை:
"இந்தியாவின் முந்தைய அரசாங்கம், பல்வேறு வாக்குறுதிகளை மட்டுமே அளித்தது. அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால், பாஜக அரசு தங்களுடைய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறது" எனத் பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
மேலும், பாஜக அரசுக்கு எதிராகத் திரண்டிருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து பேசிய அவர், "ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டிய அவர்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழல் நிறைந்த கூட்டணி. அவர்கள் செய்த தவறுகளை நாங்கள் தான் சரிசெய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
"வங்கித்துறை ஆரோக்கியமாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து, அதனை சீர்செய்ய பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். இன்று அரசியல் தலையீடுகள் இல்லாமல் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன." எனவும் தெரிவித்துள்ளார் அவர்.