"அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி
வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதை பாஜக இலக்காகக் கொண்டிருப்பதால், அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார். "அடுத்த 100 நாட்களில், நாம் அனைவரும் ஒவ்வொரு புதிய வாக்காளரையும், ஒவ்வொரு பயனாளியையும், ஒவ்வொரு சமூகத்தையும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும்," என்று புது டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய மாநாட்டில் பிரதமர் கூறினார். "தேசிய ஜனநாயக கூட்டணியை 400க்கு கொண்டு செல்ல வேண்டும். பாஜக 370 இடங்களை தாண்ட வேண்டும்." என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டு பேசிய அமித்ஷா
மூன்றாவது முறையாக வெற்றி பெற நினைப்பது ஆட்சியை அனுபவிப்பதற்காக அல்ல. தேசத்திற்காக உழைக்க விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். எனது வீட்டை நான் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 10 ஆண்டுகள் பழுதற்ற ஆட்சியும், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதும் சாதாரண சாதனைகள் அல்ல என்று பிரதமர் கூறியுள்ளார். இன்று முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாஜக தலைமையிலான முகாமை வழிநடத்துகிறார் என்றும், அதே நேரத்தில் காங்கிரஸின் கீழ் உள்ள 'இண்டியா' அணி ஊழல்களால் நிறைந்துள்ளது என்றும் அமித்ஷா கூறினார்.