புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
BF.7 வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் இந்த வகை கொரோனா அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில், வெளி நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதையடுத்து, 2023ஆம் ஆண்டு புத்தாண்டிற்கு சில கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது. நட்சத்திர விடுதிகள் அனைத்தும் இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள்:
சென்னை நட்சத்திர விடுதிகளில் 80% மக்களுக்கு மட்டுமே அனுமதி. நீச்சல் குளம் அருகில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை. குடித்துவிட்டு வாகனங்கள் இயக்கப்பட்டால் அதன் மீது காவல்துறையின் QR கோடு ஓட்டப்பட வேண்டும். பெண்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வந்துவிட கூடாது. இரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர விடுதிகள் இயங்க அனுமதி இல்லை. நீச்சல் குளங்களுக்கு அனுமதி கிடையாது. குடி போதையில் யாரும் நீச்சல் குளம் பக்கம் செல்லக்கூடாது. புத்தாண்டு அன்று கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை காவல்துறையினர் சோதனை செய்வார்கள். மது போதையால் என்ன பிரச்சனை நேர்ந்தாலும் அதை உடனே ரோந்தில் இருக்கும் காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.