புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி
வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புது வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த ஆண்டு பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேலானோர் விண்ணப்பித்துள்ளனர்" என்று கூறினார். ஏற்கனவே வாக்காளர் அட்டையில் மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், க்யூ ஆர் கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் அதில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, போலி வாக்காளர் அட்டைகளை உருவாக்க முடியாதவாறு கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
புது வாக்காளர் அட்டைகள் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வழங்கப்படவுள்ளது
மேலும் பேசிய அவர், ஏப்ரல் மாதம் புது பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அட்டையை வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்தாண்டும் வாக்காளர் அட்டை மாற்றங்களுக்காக விண்ணப்பித்தவர்கள் 16 லட்சம் பேர் உள்ளனர் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படவுள்ளதாகவும், தற்போது அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இந்த புது வாக்காளர் அட்டைகள் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.