ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை - இராமநாதபுரம் சாலைப் பகுதியில் இருக்கும் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்ய இன்று நேரில் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். கைரேகை மற்றும் கருவிழியின் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் வசதி விரைவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
அமைச்சர் சக்கரபாணி தெரிவித்த தகவல்கள்:
இது ஏற்கனவே, சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய 2 இடங்களிலும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோவை மாவட்ட ஆட்சியரும் விவசாயிகளும் வைத்துள்ளனர். இந்த கோரிக்கை நிச்சயம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்த செல்லப்படும். பின், வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும். ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக, இந்த ஆண்டில் இருந்து தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப்படும்.