தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நடப்பு கல்வியாண்டு விரைவில் முடிவுபெறவுள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புது விதிமுறைகள் குறித்த அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியாகியுள்ள அரசாணையில், 'பிளே ஸ்கூல்'களுக்கு 50 ஆயிரம், நர்சரி, பிரைமரிக்கு 1 லட்சம், நடுநிலை பள்ளிக்கு - 2லட்சம், மேல்நிலை பள்ளிக்கு - 3லட்சம் வைப்பு தொகை பணம் செலுத்தவேண்டும். பள்ளி அங்கீகாரத்துக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கீகாரம் அளிக்க ஆய்வுக்கு வருவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து விலகி பாடம் நடத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு நிர்ணயம் குறித்த விவரங்கள்
இதனைதொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட ஆண்டில், ஜூலை 31ம்தேதிப்படி வயதை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு அங்கீகரித்த பாடத்திட்ட புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான வயதுவரம்பு, பிளேஸ்கூல் என்றால் 2 வயது, எல்.கேஜி., என்றால் 3 வயது, யு.கே.ஜி., என்றால் 4 வயது, ஒன்றாம் வகுப்பு என்றால் 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழை கொண்டுவரும் மாணவர்கள் கல்வியாண்டில் இடையே வந்தாலும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சிறுபான்மையினர் பள்ளியை தவிர, மற்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். இதனையடுத்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என்று பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.