தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் சுமார் 33,222 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. சர்க்கரை, அரிசி, பாமாயில், து.பருப்பு முதலியன இந்த நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 1,96,16,093 குடும்ப அட்டைகளுக்கு மேற்கண்ட பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், நியாய விலை கடைகள் மூலம் அளிக்கப்படும் வேட்டி, சேலைகளை POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். எந்நிலையிலும் இருப்பு வைத்துக்கொண்டு பொருட்களை வழங்காமல் இருத்தல் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு இனி குடும்ப அட்டைகள் கிடையாது
இதனை தொடர்ந்து, சரியாக காலை 9 மணிக்கு நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திறக்கப்படாத கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும். அதே போல் ஒரே நபர் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருட்களை பெற்றுவருவது குறித்தும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு இனி குடும்ப அட்டை வழங்கப்படக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.