தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளதோடு, ஒரு வீடியோ பதிவையும் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், நீங்கள் அனுப்பிய பார்சல் திருப்பி வந்துள்ளது, இது குறித்த தகவலை பெற எண் 1ஐ அழுத்துங்கள் என்று ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதனை செய்யும் பட்சத்தில், நீங்கள் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சலில் போதைபொருட்கள் உள்ளது, இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அழைப்பை இணைக்கிறோம் என்று கூறுவார்கள். இதனை கேட்டு நாம் அதிர்ச்சி அடைந்து விடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து காவலாளர்கள் பேசுவதுபோல் பேசி, உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து இதைசெய்துள்ளதால் உங்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளோம் என்று கூறுவார்களாம்.
தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'-டிஜிபி சைலேந்திர பாபு
தொடர்ந்து, நேரில் வருமாறும் அழைப்பார்களாம். இக்குற்றத்தை நீங்கள் செய்யவில்லை என்று கூறும் பட்சத்தில் அரசு வழக்கறிஞர் உங்களுடன் பேசுவார் என்று கூறப்படும். அதன் பின்னர், வழக்கறிஞர் என்ற பெயரில் ஒரு நபர் உங்களை தொடர்பு கொண்டு, ரூ.1 லட்சம் பணம் கேட்பார், நீங்கள் அதனை கொடுத்துவிட்டால், மீண்டும் ரூ.5 லட்சம் கேட்கப்படும். இவ்வாறாக உங்கள் பணம் பறிபோகும் என்று சைலேந்திர பாபு வீடியோவில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் இதுபோன்று 70 புகார்கள் வந்துள்ள நிலையில், இவ்வாறு ஏதேனும் அழைப்பு வந்தால் உடனே அதனை துண்டித்து விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு தமிழக அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.