வசூல் ராஜா MBBS பாணியில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 24 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஆர்வலர்கள் நீட் (NEET-UG) மறுதேர்வை எழுதினர். முன்னதாக, வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது. இருப்பினும், பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில், 'வசூல் ராஜா MBBS' திரைப்பட பாணியில் அசல் மாணவர்களுக்கு பதிலாக போலி நபர்களை வைத்து தேர்வு எழுத முயன்ற ஒரு மிகப்பெரிய மோசடி கும்பலை போலீசார் தற்பொழுது முறியடித்துள்ளனர். இந்த சோதனையில், மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவிகள் மற்றும் தேர்வுக்கான பயோமெட்ரிக் சரிபார்ப்பு நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னணி
சிக்கிய முக்கிய மூளை மற்றும் பின்னணி
இந்த மோசடி நெட்வொர்க்கின் பின்னணியில் கயா ஏஎன்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவரான அர்பித் ராஜ் முதன்மை சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர் ஏற்கனவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சிபிஐ அமைப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவரான மயங்க் காஷ்யப் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டில் புத்திசாலி மாணவர்களை காசு கொடுத்து பயன்படுத்தி, அசல் மாணவர்களுக்கு பதில் தேர்வு எழுத வைத்துள்ளனர்.
ஆள்மாறாட்ட நெட்வொர்க்
ஆள்மாறாட்ட நெட்வொர்க் அம்பலமானது எப்படி?
ஹசன்பூர் உயர்நிலை பள்ளி தேர்வு மையத்திற்குள் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர் போல வேடமணிந்து மயங்க் காஷ்யப் நுழைய முயன்றபோதுதான் இந்த மோசடி நெட்வொர்க் முதன்முதலில் அம்பலமானது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு மையத்திற்குள் நுழைய முயன்ற காஷ்யப் போலீசாரால் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், லக்கிசராயில் உள்ள கேஆர்கே மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய தேர்வு மையங்களில் போலீசார் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் போது, போலி ஆவணங்கள் மூலம் தேர்வு எழுத முயன்ற 7 போலி வேட்பாளர்கள் மற்றும் தேர்வு செயல்முறையை கண்காணிக்க வேண்டிய பயோமெட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த 14 ஊழியர்கள் என ஒட்டுமொத்த கும்பலும் கைது செய்யப்பட்டது.