Loading...
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்

மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
10:30 am

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த சூழலில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த வினீத் ஜோஷியை திடீரென இடமாற்றம் செய்து, அவருக்குப் பதிலாக 1994 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் பால் கங்வாரை புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நியமித்து அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது.

இடமாற்றம்

வினீத் ஜோஷி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம்

இதுவரை உயர்கல்வித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த வினீத் ஜோஷி, தற்பொழுது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள நரேஷ் பால் கங்வார், இதற்கு முன் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளராகப் பணியாற்றி வந்தவர் ஆவார்.

அதற்கு முன்னதாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும் இவர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

புதிய செயலாளர்

புதிய செயலாளர் நரேஷ் பால் கங்வாரின் கல்விப் பின்னணி

பொறியியல் பின்னணி கொண்ட நரேஷ் பால் கங்வார், ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பி.டெக் பட்டமும், ஐஐடி டெல்லியில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் அரசில் பள்ளித் கல்வி, ஆற்றல், விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற பல முக்கியத் துறைகளின் முதன்மை செயலாளராகவும், ராஜஸ்தான் மின்சார வாரியம் மற்றும் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஆவார்.

ADVERTISEMENT

அரசு விளக்கம்

அரசுத் தரப்பு விளக்கம் மற்றும் பாஜக எம்பி வரவேற்பு

இந்த உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணத்தை மத்திய அரசு வெளியிடவில்லை.

இருப்பினும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

"வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்" என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பிற நியமனங்கள்

மத்திய அரசில் மேற்கொள்ளப்பட்ட பிற முக்கிய நியமனங்கள்

இந்த மறுசீரமைப்பின் கீழ் மேலும் பல செயலாளர் நிலை நியமனங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராக இருந்த கே.ஸ்ரீனிவாஸ், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுரங்கத்துறை செயலாளராக இருந்த பியூஷ் கோயல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை செயலாளராகவும், சுரங்கத்துறை புதிய செயலாளராகக் கேசவ் சந்திராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT