NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவி ரேகா ஷர்மா குறித்து இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிஎம்சி தலைவரின் "இழிவான, கசப்பான" கருத்துகளை ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் மஹுவா மொய்த்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியது. அதே போல பாஜகவும் மஹுவா மொய்த்ராவை விமர்சித்து, திரிணாமுல் எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியது.
மஹுவா மொய்த்ரா கூறியது என்ன?
ஜூலை 4 அன்று, NCW தலைவர் ரேகா சர்மா 121 உயிர்களை பலி வாங்கிய ஹத்ராஸ் நெரிசலில் காயமடைந்த பெண்களைச் சந்திக்க ஹத்ராஸ் சென்றார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் NCW தலைவர் யாரோ அவருக்காக குடை பிடித்திருப்பதை போல வீடியோக்கள் வெளியாகின. வீடியோவுக்கு எதிர்வினையாற்றிய சமூக ஊடகங்களில் பல பயனர்கள் NCW தலைவரால் ஏன் குடையைப் பிடிக்க முடியவில்லை என்று ஆச்சரியப்பட்டனர். இதற்கு பதிலளித்த மஹுவா மொய்த்ரா,"அவர் தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கி பிடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்திருப்பார்" என்று பதிவிட்டார்.
ரேகா ஷர்மாவின் பதிலும், NCW வின் எதிர்வினையும்
இதற்கு பதிலளித்த ரேகா ஷர்மா,"அவர் தனது வேலையில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் மக்களை ட்ரோல் செய்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார். மேலும் ட்ரோலர்களுக்கு எனது நேரத்தை நான் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார். ரேகா ஷர்மாவும் இந்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியதுடன், தான் குடைக்குள் நிற்கவில்லை என்றும் கூறினார். மொய்த்ராவின் கருத்து குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோருக்கும் ரேகா சர்மா கடிதம் எழுதினார். இந்த நிலையில் NCW மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக சுவோ மோட்டோவாக இந்த வழக்கினை விசாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மஹுவா மொய்த்ராவின் இழிவான கருத்துக்களை தானாக முன்வந்து எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய முயன்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.