'நம்ம சாலை' செயலி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மாநிலத்தில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது போன்ற புகார்களை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'நம்ம சாலை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியின் செயல்பாட்டினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(நவ.,1) துவக்கி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 'விபத்தில்லா தமிழ்நாடு' என்னும் முழக்கத்தினை முன்னிறுத்தி நெடுஞ்சாலை துறை இந்த செயலியினை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. பல கிராமப்புற பகுதிகளிலும் சரி, சென்னை போன்ற மாநாகரங்களிலும் சரி பல பகுதிகளில் இன்னமும் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் தான் உள்ளது.
புகாரினை பொதுமக்களே நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்
இது போன்ற மோசமான சாலைகளால் அதிகளவில் விபத்துகள் நேருகிறது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது போன்ற விபத்துகளை தவிர்க்கவே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பொதுமக்கள், அவரவர் தாங்கள் இருக்கும் பகுதியில் சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் இருப்பின் அதனை புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு புகைப்படத்துடன் கூடிய புகார் செயலியில் பதிவேற்றம் செய்த 24 மணிநேரம் முதல் 72 மணிநேரத்திற்குள் அரசு சார்பில் சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.