இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: இஸ்லாமிய பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கணவரை பிரிய குழா பெறுவார்கள். இதனை திருமணம் செய்து வைக்கும் ஜமாத்துக்கள், காஜிகள், இஸ்லாமிய இயக்கங்கள், ஷரீஅத் கவுன்சில் மூலம் இஸ்லாமிய பெண்கள் பெற்றுவந்தனர். இதற்கு இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் அனுமதியுள்ள நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஷரீஅத் கவுன்சிலில் ஒரு பெண் தனது கணவரை 2017ம் ஆண்டு குழா மூலம் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த அமைப்பின் மூலம் தனது மனைவி பெற்ற சான்றிதழை ரத்துசெய்ய வேண்டும் என்று அப்பெண்ணின் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல அந்த அமைப்பு ஒன்றும் நீதிமன்றம் அல்ல-நீதிபதி
இதனிடையே, முகலாயர் ஆட்சி, வெள்ளியர்கள் ஆட்சியில் இருந்தபொழுது இயற்றப்பட்ட சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் செல்லாது என்று 2014ம்ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி அவர் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஷரீஅத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பு தானே தவிர, பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல அது நீதிமன்றங்கள் அல்ல என்று குறிப்பிட்டார். இதனால் அந்த அமைப்பு அளித்த சான்றிதழ் செல்லாது. மேலும் இந்த அமைப்பின் மூலம் விவாகரத்து பெற்ற பெண்ணின் விவாகரத்து ரத்து செய்யப்படுவதாகவும் கூறினார். இதுபோன்ற பிரச்சனைக்கு கணவன்-மனைவி தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைகுழு அல்லது குடும்பநல நீதிமன்றத்தையே நாடவேண்டும் என்றும் கூறி தீர்ப்பளித்தார்.