36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? மும்பையில் பரவும் பீதி; போலீஸ் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மும்பையில் கடந்த 36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் மாயமானதாகவும், நகரம் முழுவதும் கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. சிவாஜி நகர், சாகிநாகா மற்றும் காட்கோபர் போன்ற பகுதிகளில் இருந்து குழந்தைகள் காணாமல் போனதாகப் பதிவிடப்பட்ட இந்தத் தகவல்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
வதந்தி
வதந்திகளை மறுத்த மும்பை காவல்துறை
இந்த விவகாரம் குறித்து மும்பை காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. "சில சமூக வலைதளக் கணக்குகள் தரவுகளைத் தவறாகச் சித்தரித்து, திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றன. 12 குழந்தைகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை. பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு (FIR) செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை
போலீஸ் தரவுகள் சொல்வது என்ன?
சமீபத்திய அறிக்கைகளின்படி, காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை கடத்தல் அல்ல, மாறாகப் பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் தொடர்பானவை. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் இதோ: ஜூன் - டிசம்பர் 2025 காலத்தில் மொத்தம் 145 குழந்தைகள் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது, அவர்களில் 93 பேர் சிறுமிகள். இதில் பெரும்பாலான குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 2025 இல் கடந்த ஆண்டின் மிகக்குறைந்த அளவாக 11 குழந்தைகள் மட்டுமே காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
வேண்டுகோள்
காவல்துறை விடுக்கும் வேண்டுகோள்
சிவாஜி நகர் மற்றும் அந்தோப் ஹில் போன்ற பகுதிகளில் இருந்து காணாமல் போனதாகச் சொல்லப்படும் சில வழக்குகளில், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 137(2) இன் கீழ் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இதைப் பெரிய அளவிலான கடத்தல் சம்பவமாகச் சித்தரிப்பது முற்றிலும் தவறு என்று போலீசார் கூறுகின்றனர். தேவையற்ற பீதியைத் தவிர்க்கவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் மும்பை காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.