128 வழக்குகள்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு எதிராக மும்பையில் வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
மும்பையில் மூத்தக் குடிமக்களை குறிவைத்து அதிகமாக நடத்தப்படும் டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மும்பை காவல்துறை நகரம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், காவல்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வு அமர்வுகள் நடத்துவதுடன், மோசடிகள் குறித்தத் தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் விநியோகித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், மும்பையில் மூத்தக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலப் பேசுவார்கள். பணமோசடி அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டுவர்.
இழப்பு
சைபர் கிரைம் மோசடியில் ஏற்பட்ட பண இழப்பு
டிஜிட்டல் கைது மோசடியில், முதியவர்களை வீடியோ அழைப்புகளில் மணிக்கணக்கில் வைத்திருந்து, போலியான ஆன்லைன் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்தி, சரிபார்ப்பு அல்லது விசாரணை என்ற பெயரில் பல வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்துகின்றனர். காவல்துறை தரவுகளின்படி, இந்த ஆண்டு மட்டும் மும்பையில் 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு ₹101 கோடி ஆகும். இந்த ஆபத்தை உணர்ந்து, காவல்துறை ஆணையர் தேவன் பார்தி மேற்பார்வையின் கீழ் சைபர் கிரைம் பிரிவு, வீடு வீடாகச் சென்று இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தில், எந்தச் சட்டமும் டிஜிட்டல் கைதுக்கு அனுமதிப்பதில்லை என்றும், எந்தவொரு அரசு அமைப்பும் பணமோசடிக்குப் பணம் அல்லது வீடியோ அழைப்புகளைக் கோருவதில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்துகின்றனர்.
உதவி எண்
சைபர் கிரைம் மோசடியை புகார் செய்வதற்கான உதவி எண்
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், உடனடியாகச் சைபர் குற்ற உதவி எண்ணான 1930 ஐத் தொடர்பு கொள்ளும்படி மூத்தக் குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சைபர் கிரைம் துணை ஆணையர் புருஷோத்தம் கராட் கூறுகையில், "எந்தவொரு மூத்தக் குடிமகனும் இத்தகைய மோசடிகளுக்குப் பலியாகாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பின் மூலம் குடிமக்களைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." என்று தெரிவித்தார்.