மும்பையில் பிரதமர் நிகழ்ச்சி கூட்டத்தில் பாதுகாப்பு அத்துமீறல்: துப்பாக்கி மற்றும் போலி PMO ஐடியுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த GFF 2026 நிகழ்விடத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோஹன் பாரேக் (24) என்ற நபர், பிரதமர் அலுவலகத்தின் (PMO) போலி அடையாள அட்டையை காட்டி பாதுகாப்பு பணியாளர்களை ஏமாற்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார். சோதனையின் போது அந்த ஐடி கார்டு போலியானது எனத் தெரியவந்தது. மேலும், அவருடன் வந்த பாதுகாவலரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இருவரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
மும்பை குற்றப் பிரிவு விசாரணை
அரசு அதிகாரியை போல ஆள்மாறாட்டம் செய்தது, சட்டவிரோதமாக ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட பல BNS பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றது என்பது தெரியவந்துள்ள நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
செப்டம்பர் 8 முதல் 11 வரை மும்பையில் நடைபெறும் 7-வது குளோபல் ஃபின்டெக் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இம்மாநாட்டில் Agentic AI, டோக்கனைசேஷன் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் மூலம் நிதிச் சேவைகளை மேம்படுத்துவது குறித்து உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விவாதிக்கின்றனர்.
பிரதமரின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நிகழ்ந்த இந்த பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.