உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ரத்து செய்தது. இந்த சட்டத் திருத்தம், சமூக ஊடக தளங்களில் அரசின் செயல்பாடு குறித்த போலி மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு ஏதுவான உண்மை சரிபார்ப்பு பிரிவுகளை நிறுவ மத்திய அரசுக்கு அனுமதித்தது. இதற்கு எதிராக மனுதாக்கல் செய்த பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா உள்ளிட்ட மனுதாரர்கள், இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 மற்றும் பிரிவு 19(1)(a)(g)) ஆகியவற்றை மீறுவதாக வாதிட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பு
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கௌதம் படேல் மற்றும் டாக்டர் நீலா கோகாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 2024 ஜனவரியில் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இந்த விவகாரம் மூன்றாவது நீதிபதிக்கு வந்தது. நீதிபதி அதுல் சந்துர்கரின் அமர்வு, இந்தத் திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் பிரிவு 19 ஐ மீறுவதாக கருதுவதாகக் கூறி, சட்டத் திருத்தங்கள் செல்லாது என அறிவித்தார். முன்னதாக, 2023ஆம் ஆண்டில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021'ஐ (ஐடி விதிகள் 2021) திருத்தியது. இதில் இடம் பெற்றிருந்த, தவறான ஆன்லைன் செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபார்ப்பு குழுக்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதி விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.