புல்லட் ரயில் திட்டத்தில் தாமதமா? ஜப்பான் முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்
செய்தி முன்னோட்டம்
மும்பை -அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் (MAHSR) இந்தியா தரப்பில் "தாமதம்" ஏற்படுவதாக ஜப்பானின் முன்னாள் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் முற்றிலும் நிராகரித்துள்ளது. இது வெறும் "தனி நபர் கருத்து" மட்டுமே என்றும், உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் மாறானது என்றும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சரும், ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) உறுப்பினருமான ஹிடேகி மகிகாரா, புல்லட் ரயில் திட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்திய அதிகாரிகள் தங்களின் சுயநலத்தை பின்தொடர்ந்ததாகவும், கொடுத்த வாக்குறுதிகளை பலமுறை மீறியதாகவும் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சிக்னலிங் அமைப்பில் ஜப்பான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பதில்
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதில்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு, MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,"மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாகவும், சீராகவும் முன்னேறி வருகின்றன" என்றார்.
ஜப்பான் தனது E20 தொடர் அதிவேக ரயில்களை 2030-களின் தொடக்கத்தில் தான் வழங்கவுள்ளது. ஏனெனில் அந்த ரயில்கள் தற்போதும் மேம்பாட்டு நிலையிலேயே உள்ளன.
ஜப்பான் ரயில்கள் வர தாமதமாகும் என்பதால், திட்டத்தை விரைந்து தொடங்க இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிவேக ரயிலை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
சிக்னலிங் கருவிகளுக்கான ஆர்டர்கள் சர்வதேச விதிகளின்படி முறையான டெண்டர் மூலமே வழங்கப்பட்டுள்ளன. இந்த சிக்னலிங் திட்டத்திற்கு ஜப்பான் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ சலுகையோ/ விண்ணப்பமோ வரவில்லை என்றும் MEA தெளிவுபடுத்தியுள்ளது.
கட்டுமான பணிகள்
அதிவேகமாக முன்னேறும் புல்லட் ரயில் கட்டுமானப் பணிகள்
மறுபுறம், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் மிக அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.
508 கிமீ நீளமுள்ள இந்த மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா (Bilimora) இடையேயான முதல் பிரிவு வரும் 2027 ஆகஸ்ட் 15 அன்றே பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளது.
ஜப்பானின் அதிநவீன ஷின்கான்சென் தொழில்நுட்பத்துடன் மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படவுள்ள இந்த ரயிலின் மூலம், மும்பை - அகமதாபாத் இடையேயான பயண நேரம் வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்களாகக் குறையும்.
தற்போது சுமார் 80% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜப்பான் அரசின் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இத்திட்டம் எவ்வித தொய்வுமின்றி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.