கைவிடப்பட்ட சுரங்கத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரத்தைக் கண்டெடுத்த 7 தொழிலாளர்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள சரோகா கிராமத்தில், ஏழைத் தொழிலாளர்கள் 7 பேரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வகையில் 17.96 கேரட் எடை கொண்ட உயர்தர வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரசு ஏலத்தில் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான விலைக்கு இந்த வைரம் விற்பனையாகும் என பன்னா வைர சுரங்க அலுவலக அதிகாரி ரவி படேல் கணித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அரசு ஏலத்தில் இந்த வைரம் விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
அதிர்ஷ்டம்
கைவிடப்பட்ட சுரங்கத்தில் கிடைத்த அதிர்ஷ்டம்
இந்த 7 தொழிலாளர்களும் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வைர சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுத்துத் தோண்டி வந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக வைரம் எதுவும் கிடைக்காததால் நம்பிக்கையிழந்து அந்த சுரங்கத்தை மூடிவிட்டு, அதற்கு அருகிலேயே மற்றொரு புதிய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வேலை செய்து வந்தனர்.
சமீபத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு பழைய சுரங்கத்தை ஆய்வு செய்ய சென்றபோது, அதன் மேற்பரப்பிலேயே இந்த மதிப்புமிக்க வைரம் கிடந்ததைக் கண்டு தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஏலத்தொகை
சமமாகப் பிரிக்கப்படும் ஏலத் தொகை
பொதுவாகப் பன்னா பகுதியில் நில உரிமையாளர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பெரிய அளவில் பங்களிப்பு கிடைக்காது.
ஆனால், இந்த விவகாரத்தில் தொழிலாளர்களே நேரடியாக நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளதால், அரசுக்கு செலுத்த வேண்டிய 12 சதவீத ராயல்டி தொகை போக மீதமுள்ள ஒட்டுமொத்தப் பணமும் 7 பேருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படவுள்ளது.
வறுமை காரணமாகத் திருமணம் கூட செய்ய முடியாமல் தவித்து வந்த இந்தத் தொழிலாளர்களின் நிலைமை, இந்த வைரத்தின் மூலம் முற்றிலுமாக மாறவுள்ளது.