கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்
கன்னியாகுமரியில் சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து பழமைவாய்ந்த சிவன் கோயில்களுக்கு ஓடியோடி பக்தர்கள் தரிசனத்தை மேற்கொள்கிறார்கள். திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்காடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்காடு, திருப்பன்றிக்கோடு, மேலாங்காடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, இந்த சிவாலய ஓட்டமானது நேற்று துவங்கியது, சிவராத்திரி தினமான இன்று இரண்டாவது நாளாக வெகு விமர்சையாக இந்த சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ளார்கள். இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்கள் காவி நிறத்தில் ஆடை அணிந்து, கையில் ஒரு பனை விசிறியும், மற்றொரு கையில் சின்ன பண முடிப்பும் வைத்து கொள்வார்கள்.
7 நாட்களுக்கு முன்னராக மாலை அணிந்து விரதம்
இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ., ஆகும். இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஓடும் பொழுது கோவிந்தா, கோபாலா என்று நாராயண நாமத்தை கூறியவாறே ஓடுவார்கள் என்பது இதில் ஓர் சிறப்பான விஷயமாகும். மேலும் இந்த சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் 7 நாட்களுக்கு முன்னராக மாலை அணிந்து விரதம் இருக்க துவங்குவார்களாம். காலை, மாலை என இரு வேளைகளும் நீராடி சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவர். வெறும் சைவ உணவுகளை மட்டுமே உண்டு இந்த விரதத்தினை அவர்கள் மேற்கொள்வார்களாம். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்களுக்கு வழி நெடுக்கும் பொதுமக்கள் குடிநீர், மோர், பழங்கள், கஞ்சி போன்ற உணவு பொருட்களை வழங்குவர்.