சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி மேம்பாட்டிற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.30.28 கோடி செலவில் 74 காம்பாக்ட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதே போல் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் பெண்களுக்கான 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த வாகனங்களின் செயல்பாட்டினை இன்றுசெப்.,20) ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான நேரு கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இதனிடையே, சென்னை பெண்களுக்காகவே இந்த பிரத்யேக வாகனம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் பெண்கள் கழிவறைகளை தேடி ஓடவேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
15 நடமாடும் ஒப்பனை அறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது
சென்னையில் போதுமான அளவிற்கு கழிப்பறைகளை பொது மக்கள் வசதிக்காக ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்னும் நோக்கில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தான் இந்த நடமாடும் ஒப்பனை அறை பெண்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒரு மண்டலத்திற்கு ஒன்று என்னும் வீதத்தில் தற்போது 15 நடமாடும் ஒப்பனை அறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு ஒப்பனை அறையின் மதிப்பு ரூ.29.13 லட்சம் என்னும் நிலையில், அதில் உடை மாற்ற ஓர் சிறு அறை, தாய்ப்பால் கொடுக்க ஏதுவாக ஓர் அறை உள்ளிட்டவைகளுடன் சானிட்டரி நாப்கின்னும் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.