தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்து தற்போது தற்போது அந்நாட்டு வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று(டிச.,14) கடிதம் எழுதியுள்ளார். அதில், 'புதுக்கோட்டை, ஜெகதாப்பாட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 6 மீனவர்கள் IND-TN-08-MM-26 என்னும் பதிவெண் கொண்ட இயந்திர படகில் நேற்று(டிச.,13) மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களை படகுடன் சேர்த்து அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, கடந்த ஒருவாரத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இலங்கை கடற்படையினர் இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்ற செயல்களால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, பெரும் அச்சத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து முதல்வர் தனது கடிதத்தில், மேற்கூறப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் ஒரு படகை தவிர்த்து ஏற்கனவே இலங்கைவசம் 39 மீனவர்கள் மற்றும் 137 படகுகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.