மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தருமபுரியில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான முகாமினை தருமபுரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகளிரின் முன்னேற்றத்திற்கு பெரும் உந்துகோளாக அமையவுள்ள இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்தே எனது எண்ணங்கள் முழுவதும் உள்ளது. இந்த திட்டமானது எந்தவொரு தகுதியான மகளிருக்கும் போய் சேராமல் இருந்து விட கூடாது என்பதன் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் ஆரம்பமான விண்ணப்ப விநியோகங்கள் ஏற்கனவே துவங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முகாம்
பல தலைமுறைகளை கடந்து இத்திட்டம் பெண்களுக்கு பயனளிக்கும் - மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து அவர், கடந்த 1989ம்ஆண்டு தமிழக மகளிர்கள் பலருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டமானது தருமபுரியில் கலைஞரின் ஆட்சியின் பொழுது துவக்கி வைக்கப்பட்டது" என்றும்,
"அதே தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாமினை வரும் ஜூலை 24ம்தேதி நான் துவக்கி வைக்கவுள்ளேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கான முகாம்கள் சரிவர இயங்குகிறதா என்பதனை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிடவேண்டும் என்றும் முதல்வர் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிகிறது.
மேலும், கலைஞர் நூற்றாண்டில் துவங்கப்படும் இத்திட்டம் ஒரு தலைமுறையையே மாற்றும் திட்டமாக மட்டுமல்லாமல், பல தலைமுறைகளை கடந்து இது பெண்களுக்கு பயனளிக்கும் என்றும் எண்ணி துணிவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.