மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை: இந்திய எல்லையில் பதட்டம்
மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நேற்று மாலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததை அடுத்து, மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லைக்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மியான்மர் நாட்டினர் தஞ்சம் கோரி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். மியான்மர் ராணுவத்துக்கும், மியன்மார் நாட்டின் ராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சின்லாந்து பாதுகாப்புப் படை(CDF) வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "ஞாயிற்றுக்கிழமை மாலை சண்டை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த இது இன்று அதிகாலை முடிவடைந்தது. சர்வதேச எல்லைக்கு அருகாமையில் குண்டுவெடிப்பு நடந்ததாக செய்திகள் உள்ளன. ஆனால் இந்திய தரப்பில் எந்த சேதமும் இல்லை, "என்று சம்பாயின் துணை ஆணையர் ஜேம்ஸ் லால்ரிஞ்சனா கூறியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் நுழைந்த 1,000க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்கள்
மோதலின் நிலைமையை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், சம்பாயில் உள்ள எல்லை நகரமான சோகாவ்தாருக்கு நீதிபதிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். "எல்லை தாண்டிய நிகழ்வுகள் காரணமாக நம் பக்கத்திலிலும் சேதம் ஏற்படலாம். அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம், இது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று லால்ரிஞ்சனா தெரிவித்துள்ளார். இந்த மோதலை தொடர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்கள், அதாவது எல்லைக்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள், இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் குறைந்தது இருவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக சம்பாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.