மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை
மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி(MNF) கட்சியை விட எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) முன்னிலை பெற்றுள்ளது. பிற்பகல் 12 மணி நிலவரப்படி, பெரும்பான்மையை கடந்த ZPM, 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான MNF கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மிசோரத்தில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறி இருந்தாலும், சில கருத்து கணிப்புகள், MNF கட்சியை ZPM கட்சி வீழ்த்தும் என்று தெரிவித்திருந்தன.
முதல்வர் ஜோரம்தங்காபின்னடைவு; துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வி
துய்சாங் தொகுதியில் ZPM தனது முதல் வெற்றியை பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில துணை முதல்வர் டவ்ன்லூயாவை ZPM கட்சி வேட்பாளர் தோற்கடித்தார். இதற்கிடையில், ஐஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜோரம்தங்காவும் பின்தங்கியுள்ளார். ஐஸ்வால் கிழக்கு-1 தொகுதி தான் மிசோரத்தின் முக்கிய தேர்தல் களமாக பார்க்கப்படுகிறது. அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லால்சங்லுரா ரால்டேவை விட முதல்வர் ஜோரம்தங்கா பின்னடைவை கண்டுள்ளார். மேலும், சைஹா தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிறுபான்மை இன மாரா தலைவர் கே பெய்ச்சுவா ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்று வருகிறார். இவர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், MNF கட்சியில் இருந்து பாஜகவுக்கு கட்சி தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.