Page Loader
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி
ஐஸ்வால் பகுதியில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Aug 23, 2023
01:04 pm

செய்தி முன்னோட்டம்

மிசோரத்தின் சைராங் பகுதிக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில்வே பாலம் இன்று(ஆகஸ்ட் 23) இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஐஸ்வால் பகுதியில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த போது, 35-40 தொழிலாளர்கள் அந்த ரயில்வே பாலத்தில் பணியுரிந்து கொண்டிருந்தனர். அதனால், மேலும் பல தொழிலாளர்கள் அந்த இடத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. "இடிபாடுகளில் இருந்து இதுவரை பதினேழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தகிப்பி

காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் 

மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். "மிசோரத்தில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன." என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். "அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." என்று மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார். வடகிழக்கு எல்லை ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக NF ரயில்வேயின் CPRO, சப்யாசாச்சி தே கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மிசோரத்தின்  முதலமைச்சர் ஜோரம்தங்காவின் ட்விட்டர் பதிவு