டெல்லியில் பெண்கள் மாயம்? பீதியை கிளப்ப சினிமா பாணியில் நடந்த 'பெய்டு புரமோஷன்'
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அளவில் மாயமாவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும், அதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்றும் செய்திகள் வெளியாகின. இது போன்ற செய்திகள் திட்டமிட்டு 'பெய்டு புரமோஷன்' (Paid Promotion) மூலம் மக்களிடையே பீதியை உருவாக்க பரப்பப்படுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
விளம்பர உத்தியும், சர்ச்சையும்
இந்த விவகாரம் குறித்து புலனாய்வு செய்த டெல்லி காவல்துறை, குறிப்பிட்ட ஒரு கருத்தாக்கத்தை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் நிதி உதவி பெற்று (Sponsored posts) இச்செய்திகள் பரப்பப்படுவதை கண்டறிந்துள்ளது. இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், டெல்லியில் பெண்கள் மாயமாவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மர்தானி 3' திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இத்தகைய போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி இத்தரவுகளை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது. டெல்லியை காணாமல் போனவர்களின் நகரமாக பாஜக மாற்றிவிட்டதாக சாடியது. பீதியை கிளப்பி பணமீட்ட முயலும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.