டாஸ்மாக் பாட்டில் முறைகேடு, ஊழியர்கள் போராட்டம், தனியார்மயம் குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடுகளில் இந்த பாட்டில் முறைகேடும் ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் சேவைகளை தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பார்ட்டி ஃபண்ட்
பார்ட்டி ஃபண்ட் ஒழிப்பு & ரூ. 10 கூடுதல் கட்டண விவகாரம்
"முன்னதாக ரூ.140 கொண்ட பாட்டிலுக்கு திரும்ப ஒப்படைக்க ரூ.10 மற்றும் பார்ட்டி ஃபண்ட் ரூ.10 என மொத்தம் ரூ. 160 வசூலித்து வந்தனர். தற்போது பார்ட்டி ஃபண்டை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பாட்டில் திரும்பப் பெறும் ரூ.10 தொகையை அதிகாரப்பூர்வமாக MRP விலையிலேயே சேர்த்துப் பெற அரசு உத்தரவிட்டுள்ளது".
இத்தொகை முழுமையாக அரசு கணக்கில் கொண்டுவரப்படும். கடந்த ஆட்சியில் 99% பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாக நீதிமன்றத்தில் பொய்யான கணக்கு காட்டப்பட்டதாகவும், தற்போதைய பாட்டில் பின்னணியில் பெரிய 'லாபி' செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
பாட்டில்களை பெற்றுக்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள 4,800 டாஸ்மாக் கடைகளின் முன்பும் விரைவில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
சட்ட நடவடிக்கை
பணிக்கு திரும்பாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை
பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை கண்டித்து நேற்றைய தினம் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ரூ. 14,000-லிருந்து ரூ. 33,000 ஆக உயர்த்தியதோடு, வார விடுமுறை, சீருடை, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை அரசு வழங்கியுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 960 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், கடைகளை பூட்ட வற்புறுத்திய 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்".
ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் தற்காலிக மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு கடைகள் திறக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தனியார்மயம்
டாஸ்மாக் தனியார்மயமாக்கப்படுமா?
டாஸ்மாக்கை தனியார்மயமாக்குவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ்,"டாஸ்மாக்கை தனியார்மயமாக்குவது குறித்து அரசு பரிசீலிக்காமல் இல்லை. இருப்பினும், கடந்த 2003-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதற்காக தனியாரிடமிருந்த மதுக்கடைகளை அரசுடைமையாக்கினார் என்ற பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்".
"தனியாரிடம் கொடுத்தால் சிண்டிகேட் அமைத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவார்கள். எனவே தற்போதைய பிரச்சினைக்கு தனியார்மயமாக்கல் மட்டுமே தீர்வாகிவிடாது" எனக் கூறினார்.