சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொழுது மயிலாடுதுறை எம்,எல்.ஏ. ராஜகுமார், மயிலாடுதுறை பகுதியில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் பொழுது மின் பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது. அதனை குறைக்க புதைவட மின்கம்பிகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இதன் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.
கூடுதலாக 7 கோட்டங்களில் புதைவட மின்கம்பிகள்
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் ஆவடி கோட்டங்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதே போல் தாம்பரம், அடையார் உள்ளிட்ட கோட்டங்களில் இப்பணியானது நடந்து வருகிறது. மேலும் கூடுதலாக 7 கோட்டங்களில் புதைவட மின்கம்பிகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் யாவும் நடந்து முடிந்த பின்னர் முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.