சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
செய்தி முன்னோட்டம்
சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
தியாக சீலர்களின் நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்ய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (ஜன.,24) நேரில் சென்றுள்ளார்.
அப்போது, காந்திமண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கான சிலைகள் விரைவில் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மார்பளவு சிலை
கோவை வ.உ.சி. மைதானத்திலும் கப்பலோட்டிய தமிழர் சிலை - மு.பெ.சாமிநாதன்
காந்தி மண்டப வளாகத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் கூடிய நினைவு அரங்கத்திற்கான பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது.
முன்னாள் முதல்வர் சுப்பராயன் சிலையும் அமைக்கப்படவுள்ளது. கப்பலோட்டிய தமிழர் வஉசி இழுத்த செக்கு இங்கே உள்ளது.
அதனுடைய அரங்கம் புதுப்பிக்கப்பட்டு மார்பளவு சிலை வைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கோவை மத்திய சிறையில் இருக்கும் பொழுது தான் வஉசி செக்கு இழுத்தார்.
எனவே, கோவை வ.உ.சி. மைதானத்திலும் அவரது சிலை வைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.
அதே போல் கட்டபொம்மன் சிலை 98% நிறைவடைந்துள்ளது என்றும், மருது சகோதரர்கள் சிலையும் கிட்டத்தட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.