பிரதமர் மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'சிறுதானிய பாடல்' கிராமி விருதுக்கு பரிந்துரை
பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்ற பாடல், 'சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி'யின் கீழ் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலகளாவிய சிறுதானியங்கள்(ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்த போது, அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன. "இன்று உலகம் முழுவதும் 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக' கொண்டாடப்படும் நிலையில், இந்தியா இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகள் மற்றும் குடிமக்களின் முயற்சியால், 'ஸ்ரீ அன்னா' இந்தியா மற்றும் உலகத்தின் செழுமைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும்" என்று பிரதமர் அந்த உரையின் போது கூறியது இந்த சிறுதானிய பாடலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பலமுறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஃபாலு ஷா
இந்த பாடலை ஃபாலு மற்றும் கௌரவ் ஷா ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் ஆறு பாடல்கள் 'சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஃபாலு ஷா இதற்கு முன்பு பலமுறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். 2022 இல் 'எ கலர்ஃபுல் வேர்ல்ட்' ஆல்பத்திற்காக அவருக்கு 'சிறந்த குழந்தைகளுக்கான ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருது கிடைத்தது. ஃபாலு ஷாவும் அவரது கணவர் கௌரவும் இதற்கு முன் பல பாடல்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள் இருவரும் 'ஃபோராஸ் ரோடு' என்ற இசைக்குழுவை சேர்ந்தவர்கள் ஆவர்.