100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, e-KYC ஒருங்கிணைப்பை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், கிராமப்புற குடும்பங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் கிராமப்புற மேம்பாட்டை உறுதி செய்கிறது. நாடு முழுவதும் 2.69 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ள இந்தத் திட்டத்தில் 26 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
வேலை அட்டை
வேலை அட்டை வழங்கல் மற்றும் புதுப்பித்தல்
இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் பெண்களுக்கு, விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 15 நாட்களுக்குள் வேலை அட்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேலை அட்டைகள் வழங்குதல், சரிபார்த்தல் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் மாநில அரசுகளே பொறுப்பாகும். தொழிலாளர் சரிபார்ப்பு இப்போது NMMS (தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு) செயலியின் e-KYC அம்சத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதில், கிராம மக்கள் உதவியாளர் அல்லது மேற்பார்வையாளர், பணியாளரின் படத்தைப் பிடிப்பதன் மூலம், அவர்களின் ஆதார் விவரங்கள் நிகழ்நேரத்தில் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படுகின்றன. இந்த நடைமுறை ஒரு நிமிடத்திற்குள் பணியாளரைச் சரிபார்க்க உதவுகிறது.
தடை
தன்னிச்சையான நீக்கத்திற்குத் தடை
வேலை அட்டைகள் நீக்கப்படுவதைத் தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் கொண்ட நிலையான இயக்க நடைமுறை (SOP) வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதை உறுதி செய்ய, தன்னிச்சையான நீக்கத்தைத் தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.