சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம்
சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை 10% வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதன் காரணமாக வாகனஓட்டிகள் நீண்டநேரம் சிக்னல்களில் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளதால், அந்நேரத்தினை குறைக்கவும், அந்நேரத்தில் அவர்களுக்கு இதமான மெல்லிசைப்பாடல்கள் இசைக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை முடிவுச்செய்தது. அதன்படி காத்திருப்பு நேரத்தினை குறைக்கும் வகையில் ரூ.15கோடி செலவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய 302 சிக்னல்களை இயக்க போக்குவரத்துத்துறை கடந்தாண்டு,மே மாதம் முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகனஓட்டிகளின் மனஅழுத்தத்தினை குறைக்க போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த செய்திகள் மற்றும் இதமான மியூசிக் இசைக்கத்திட்டமிட்டு கடந்த 2022.,ஏப்ரல் மாதம் 6ம்தேதி இந்த திட்டம் சென்னையின் முக்கியப்பகுதிகளான 105 இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
இந்நிலையில், தனியார் பண்பலை நிறுவனங்கள் உதவியுடன் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் இசையில் உருவான பாடல்கள் இசையமைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது, இவ்வாறு சிக்னல்களில் ஒலிபரப்பப்படும் போக்குவரத்து விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் மெல்லிசை பாடல்கள் காரணமாக வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சிக்னல்களில் ஒலிபரப்பாகும் மியூசிக் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.