'இந்தியாவுக்கு பாகிஸ்தான் மேல் இருக்கும் கவலை வேறு': அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நாளை (மே 26) நடைபெறவுள்ள குவாட் (Quad) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ச் சூழலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது குறித்து இந்தியா ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் விளக்கமளித்தார். மார்கோ ரூபியோ, நாளை (மே 26) டெல்லியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் 'குவாட்' வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
இந்தியாவின் கவலை
'பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கவலை வேறானது'
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, "பாகிஸ்தான் மண்வழியாகச் செயல்படும் ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவை இலக்கு வைப்பது குறித்து புதுடெல்லி எப்போதும் கவலை கொண்டுள்ளது; அதை அவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வருகின்றனர்". "ஆனால், தற்போதைய ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு சமரச அமைப்பாளராகவும், மத்தியஸ்தராகவும் செயல்படுவது குறித்து இந்தியா எங்களிடம் எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து பேச்சுவார்த்தையில் எதுவும் வரவில்லை. இந்தியாவின் பாகிஸ்தான் மீதான பிரச்சனை முற்றிலும் வேறானது, எனவே அவர்கள் இதில் புகார் கூற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப்
"இந்தியா என் மேல் 100% நம்பிக்கை வைக்கலாம்": டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக ஆற்றிய உரையில், "இந்தியா என் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைக்கலாம். எனது நெருங்கிய நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நான் மிகப்பெரிய ரசிகன்" என்று குறிப்பிட்டார். முன்னதாக, அமெரிக்கா -ஈரான் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரின் முயற்சியே காரணம் என்று டிரம்ப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.