IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா!
மேன்கைண்டு பார்மா (Mankind Pharma) நிறுவனமானது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது. இந்நிறுவனமானது இந்தியாவில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும், சில அழகுசாதனப் பொருட்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 25 உற்பத்தி ஆலைகளையும், 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூடங்களையும் வைத்திருக்கிறது இந்நிறுவனம். இந்த ஐபிஓ-வின் மூலம் 4,326.36 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது மேன்கைண்டு பார்மா. இந்த ஐபிஓ-வானது முழுமையாக OFS (Offer For Sale) முறையில் வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் புரோமோட்டர்களே தங்கள் பங்குகளை இந்த ஐபிஓ மூலம் வழங்கவிருக்கிறார்கள். இதனால், நிறுவனத்திற்கு முதலீடுகள் எதுவும் கிடையாது.
ஐபிஓ தகவல்கள்:
வரும் ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி, 27-ம் தேதி வரை இந்த நிறுவனத்தின் ஐபிஓ-வில் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கிற்கு ரூ.1,026 முதல் ரூ.1,080 வரை விலை வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 13 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் இந்த ஐபிஓ-வில் விண்ணப்பிக்கலாம். QIB-களுக்கு 50%-மும், NII -களுக்கு 15%-மும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35% பங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மே 3-ம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மே 9-ம் தேதி பங்குகள் பட்டியலிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி இதன் கிரே மார்க்கெட் ப்ரீமியம் ரூ.80-ஆகவும், இன்று இதன் கிரே மார்க்கெட் ப்ரீமியம் ரூ.60-ஆகவும் இருக்கிறது.