'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு
மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாடு உள்ளது என்றும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி வருகிறது என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே குற்றம்சாட்டியுள்ளார். எல்லை மாநிலங்களில் அமைதியின்மை நிலவி வருவது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பிற்கு மோசமானது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய சர்வதேச மையத்தில் 'தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடியபோது, மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஜெனரல்(ஓய்வு) நரவனே, "பதவியில் இருப்பவர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.
இந்த குழுக்களுக்கு பல ஆண்டுகளாக சீனா உதவி வருகிறது
மேலும், "இதில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாடு இல்லை என்று நிராகரித்துவிட முடியாது. நான் பேச்சுக்காக சொல்லவில்லை, நிச்சயமாக அவைகளின் ஈடுபாடு உள்ளது. முக்கியமாக, பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி வருகிறது." என்று அவர் தெரிவித்தார். இந்த குழுக்களுக்கு பல ஆண்டுகளாக சீனா உதவி வருகிறது என்றும், தற்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதற்கு பிறகு, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையில் போதைப்பொருள் கடத்தலின் பங்கு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "போதைப்பொருள் கடத்தல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்கள் தற்போது அதிகரித்து கொண்டே போகிறது." என்று அவர் கூறினார்.